பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், பால் பண்ணை அமைக்கவும் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டது.
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கில் ஒரு பங்கு விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கூட நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அவர்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பால் பண்ணை அமைக்க 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, வழக்கானது எந்த ஒரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.