சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகளின் தொகுப்பு: விளக்கமளித்த சென்னை உயர்நீதிமன்றம்!

’தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ - மாணவியரை கல்லூரி ஊக்குவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூர் கல்லூரி, உயர்நீதிமன்றம்
திருவாரூர் கல்லூரி, உயர்நீதிமன்றம்ட்விட்டர்
Published on

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு இன்று (செப்.16) விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்துவைத்த நீதிபதி சேஷசாயி, 'சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு’ என விளக்கமளித்துள்ளார். ’இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா, குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா? நாட்டுக்குச் சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?’ எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

’சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ’நாட்டில் தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியாது எனவும், அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்’ எனவும் குறிப்பிட்டார். ’மத பழக்கவழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம்’ எனக் கூறிய நீதிபதி, ’அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பினார்.

‘தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ - மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்’ என்றார். ‘ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ’கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com