பொறுப்பற்ற செயல்: டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பொறுப்பற்ற செயல்: டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பொறுப்பற்ற செயல்: டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
Published on

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தான் கேட்ட விளக்கத்தை உயர்நீதிமன்றம் கேட்டதாகக் கூறியது பொறுப்பற்ற செயல் என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 3,321 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.

இதனிடையே, மதுபான கடைகளை மூடாமல் இருக்கும் வகையில் சண்டிகர் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் மாநில சாலைகளை ஊராட்சி சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வாறு சாலைகளின் பெயர்களை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி தமிழக அரசு மூடப்பட்ட கடைகளைத் திறக்கும் பணியில் ஈடுபட்டது. 

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு பொது நல வழக்கு தொடர்ந்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய, மாநில சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு தடை விதித்தது. வழக்கின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் விளக்கங்கள் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியது. மேலும் அந்த விளக்கங்களின் அடிப்படையில் மதுபானக் கடைகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது.

இந்நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. சண்டிகர் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்றும், இது தொடர்பாக விரைவில் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதன் பேரிலேயே வழக்கு தொடர்ந்ததாக தமிழக அரசு கூறியது.

இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த விளக்கத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது சந்தேகம் தொடர்பாக விளக்கம் கேட்டு விட்டு, உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது பொறுப்பற்ற செயல் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்‌ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com