மன்னிக்க எஸ்.வி.சேகர் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்

மன்னிக்க எஸ்.வி.சேகர் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்

மன்னிக்க எஸ்.வி.சேகர் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்

சிறுபிள்ளை செய்த தவறை மன்னிக்கலாம், முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது என்று எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டார். அதோடு, எஸ்.வி.கேகர் கருத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். 

நீதிபதி ராமதிலகம் கூறுகையில், “ஏப்ரல் 19ஆம் தேதி திருமலை என்பவர் அனுப்பிய பதிவை பார்வேர்ட் செய்ததாக கூறுகிறார்.  ஒருவர் கோவமாக இருக்கும்போதோ அல்லது எமோஷனாக இருக்கும்போது வார்த்தைகளை விடுவது சாதாரணம். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு வருத்தப்படுவது இயல்பு. ஆனால் இந்தப் பதிவு என்பது உள்நோக்குடன் தெரிந்தே பதிவிட்டதாக தெரிகிறது. 

ஒரு சாதாரண நபர் கருத்து பதிவிடுவதற்கும், ஒரு முக்கிய பிரமுகர் பதிவிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இது பெண் பத்திரிகையாளர் மீதான நேரடி தாக்குதலாகத்தான்( in abusive language)தெரிகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். மக்கள் நீதியின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது. இதுபோன்ற மன்னிக்க மனுதாரர் சிறுபிள்ளை இல்லை. 

பணியிலிருக்கும் பெண்கள் குறித்து அந்தப் பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அந்தப் பதிவு கடுமையானதாக உள்ளது. தனது பதிவு குறித்து வருத்தம் மட்டுமே எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார், ஆனால் பதிவில் உள்ள கருத்துக்களை மறுக்கவில்லை.

 பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்களை சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அப்படி தெரிவித்தால் பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிப்பட்ட செயல்பாடு என்பது ஒரு நபரை சாதிப்பெயரை சொல்லி கூப்பிடுவதைவிட கொடூர குற்றமாகும். படுக்கையை பகிர்ந்து கொள்வது மூலம் மட்டும்தான் ஒரு பெண் சமூக வாழ்வில் மேலே வர முடியுமென்றால், இந்தக் கருத்து தற்சமயம் உயர் பதவியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தக் கருத்து பொருந்துமா?.

 சமூக உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர வேற்றுமையையும், பதட்ட நிலையையும் உண்டாக்க கூடாது. இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதே தவிர அழிக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற மனநிலை உருவாகக்கூடாது. இக்கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டும் அல்ல. பெண்ணினத்திற்கு எதிரானது.

 அந்தக் கருத்துக்களை பரப்பியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை எதிர்த்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான நடைமுறை அல்ல என மக்களிடம் கருத்து நிலவுவது இயற்கையானதே. தனி நபர் மீதான புகாரில் நடவடிக்கை என்ன எடுப்பீர்களோ அதை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com