“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
Published on

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்பதே தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. 50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. டெண்டர் பணிகளும் நிறைவடைந்து நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடலோர மண்டல ஒழுங்கு முறைக்கு எதிராக பணிகள் நடைபெற்று வருவதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஆஜராகி வாதாடிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், “விதிகள் வரையறை செய்வதற்கு முன்பாக கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை இருக்கும் வளாகத்திற்கு உள்ளேயே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதில் விதிமீறல் எதுவும் இல்லை. ஜெயலலிதா நினைவிடத்தின் வரைபடத்தையும் தாக்கல் செய்கிறோம்” என்று கூறினார்.

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “உலகின் மிக நீளமான கடற்கரையில் ஒன்றாக மெரினா உள்ளது. அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் ஜெயலலிதா நினைவிடம் அமையக் கூடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. மெரினாவின் அழகு பாதிக்கப்படக் கூடாது. தனிப்பட்ட கருத்து எதுவாக இருந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு அளிக்கப்படும். வழக்கறிஞர்களின் வாதங்களைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த வழக்கிலும் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த பிறகு அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று கூறினார்.

ஜெயலலிதா நினைவிட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com