செவிலியர் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தைத் தொடங்கினர். டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, செவிலியர்கள் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
செவிலியர்கள் போராட்டத்திற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் தமது உத்தரவில், “சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும். மீறி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். நாளை பணி நேரத்தில் செவிலியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தால், சம ஊதியம் வழங்கும் கோரிக்கைகளில் பேச்சுவார்தையில் அரசு ஈடுபட வேண்டும். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புபவர்கள் மீது நடவடிக்கை கூடாது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், போதிய ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள் என்று தலைமை நீதிபதி கூறினார்.
பேச்சுவார்த்தையில் என்ன நடவடிக்கை என தெரிவிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தக்கட்ட விசாரணை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு முதல் திங்கட்கிழமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை எடுத்துக் கூறி போராட்டத்தை கைவிடுமாறு டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் 90 சதவீதம் ஏற்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் தங்களது போராட்டத்திற்கு பலன் கிடைக்க வேண்டும் என்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.