
அகிம்சா சோசியல் கட்சியின் நிறுவனர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது” என குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் “பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டுமென்று கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், அந்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, “தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்குவதற்கு எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் இருப்பதாகவும், இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவைப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் இந்த வழக்கை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் தகவல்களை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.