அமைச்சர் வேலுமணி மீதான விசாரணை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரின் பேரில் நடைபெற்றுள்ள ஆரம்பக்கட்ட விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர்கள், உறவினர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் டெண்டர்கள் தரப்படுவதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தாக்கல் செய்திருந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அளித்த புகாரில், ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாகவும், அறப்போர் இயக்கத்தின் புகாரையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுவரை நடத்தியுள்ள ஆரம்பக் கட்ட விசாரணை குறித்து வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர். அப்போது பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மூத்த அமைச்சர் மீதான புகாரை, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் முறையாக இருக்காது என்றும், எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையைப் பொருத்து அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.