மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை
Published on

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர்.

ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக மனு தாக்கல் செய்துள்ளது.  உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுகவின் மனு அளித்துள்ளது. அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க இயலாது என தமிழக அரசு கூறியதை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக தாக்கல் செய்த மனு இன்றிரவு 10.30 மணிக்கு பொறுப்பு தலைமை நீதிபதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com