சென்னைவாசி ஒருவரின் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னைவாசி ஒருவரின் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னைவாசி ஒருவரின் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையை சேர்ந்த ஒருவருக்கு மாநகராட்சி சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை பிறப்பித்தது. முன்பு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட இதில் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு சென்னைவாசிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்கள் மற்றும் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான சொத்து வரியை சென்னை மாநகராட்சி விதித்திருப்பது சட்டவிரோதமானது. அதேபோல, புதிய சொத்து வரி உயர்வு குறித்து கருத்து தெரிவிக்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும் அதனை மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. எனவே புதிய சொத்து வரி உயர்வுக்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவானது, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி, "அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.3,695-இல் இருந்து ரூ.7,170-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் இந்த வரி உயர்த்தப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கும் விளக்கம் அளிக்க முடியவில்லை. சென்னை மாநகராட்சி சட்டத்தின் படி, இதுதொடர்பான வரி உயர்வுக்கு முறையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இதனை செய்ய மாநகராட்சி தவறிவிட்டதால் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com