ஸ்விகியில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா..? ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடியுமா? என்பது குறித்து இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்குமாறு ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனத் தெரிவிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஒவ்வோர் ஆண்டும் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது என்றும் அதில் அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வை காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் போராட்டத்தால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் என கூறினார். மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார். கற்பிப்பதுதான் ஆசிரியர்களின் நோக்கம் என்றால் தேர்வு நேரம் தான் போராட்டத்திற்கு நேரமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தொழிலாளிகள் போன்று சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகா? என கேள்வி எழுப்பியது.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் எவ்வளவு அதிக வேலைபளு கொடுக்கப்படுகிறது என தெரியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, உயர்நீதிமன்றத்தில் 6,500 ரூபாய் ஊதியத்திற்கான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எத்தனை பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் போட்டியிடுகின்றனர் தெரியுமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
கொரியர் சேவை, உணவகங்கள், ஸ்விகி போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தனியார் பள்ளியில் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு போராட்டத்தை கைவிடும் வரை கற்பிக்கக் கூடாது என உத்தரவிட்டால் ஏற்பீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்கள், ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் வசைபாடுவது சரிதானா? என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், தாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு இக்கல்வியாண்டு முடியும் வரை மட்டுமாவது தங்களின் போராட்டத்தை தள்ளிவைக்க முடியுமா? என பிற்பகலுக்குள் தெரிவிக்குமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு கூறிய நீதிபதி கிருபாகரன், ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், உத்தரவுகளாக பிறப்பிக்காமல், மாணவர்கள் நலன் கருதி அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்குவதாகவும் தெரிவித்தார்.