மார்டின் அலுவலக ஊழியர் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மார்டின் அலுவலக ஊழியர் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மார்டின் அலுவலக ஊழியர் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த தொழிலதிபர் மார்டினின் அலுவலக காசாளர் பழனிசாமியின் உடலில் இருந்த ரத்த காயங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் பழனிசாமி என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். மார்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது, பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நேரிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்தச் சூழலில் கடந்த 3ம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதையடுத்து வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் இது கொலை என அவரது மகன் ரோஹின்குமார் புகார் கூறினார். மேலும் இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ரோஹின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் கார்த்திக்கேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிருடன் இருக்கும் போதே ஏற்பட்டதா அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினரா எனச் சந்தேகம் எழுப்பினர். தற்போது பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும்,தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக நாளை முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.மேலும் பழனிசாமியின் உடல் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது என்றும் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com