"சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனைக்கு சீல் வைப்பது முறையல்ல"-உயர்நீதிமன்றம்!

"சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனைக்கு சீல் வைப்பது முறையல்ல"-உயர்நீதிமன்றம்!
"சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனைக்கு சீல் வைப்பது முறையல்ல"-உயர்நீதிமன்றம்!

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சீல் வைப்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணானது என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சீல் வைத்த திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவர் ஏ.செல்வம்மாள் மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டது. அதனடிப்படையில், அவருக்கு சொந்தமான ஸ்ரீ புவனேஸ்வரி மருத்துவமனைக்கு மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனரால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செல்வம்மாள் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மருத்துவத்துறை உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததன் அடிப்படையில் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர் தரப்பில் மருத்துவருக்கு எதிரான குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் அவர் தொடர்புடைய அசையும் சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அதை மீறும் வகையில் மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் செயல்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது துணை இயக்குனர் தரப்பில் மருத்துவர் செல்வம்மாள் மீதான குற்ற வழக்கில் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், சட்டவிரோத கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இடம் என்பதால் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி அப்துல்குத்தூஸ், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணாக மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, துணை இயக்குனர் பிறப்பித்த அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com