டி.கல்லுப்பட்டி தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததன் உண்மை காரணம் என்ன?-நீதிமன்றம் கேள்வி

டி.கல்லுப்பட்டி தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததன் உண்மை காரணம் என்ன?-நீதிமன்றம் கேள்வி
டி.கல்லுப்பட்டி தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததன் உண்மை காரணம் என்ன?-நீதிமன்றம் கேள்வி

டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின் 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் பழனிச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த காரணத்தை விளக்கி மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்க காரணம் என்ன என்பது குறித்த உண்மைகளை விளக்கி புதிதாக மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26க்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com