முதலமைச்சருடன் மதுசூதனன் சந்திப்பு : என்ன சொல்லப்போகிறார்?
முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென சந்தித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்தார். பின்னர் தங்கள் தரப்பு தான் அதிமுக என தெரிவித்தார். அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனும் ஆதரவு தெரிவித்திருந்தார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய, டிடிவி தினகரன் அணி உருவானது. இதையடுத்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இருந்தாலும் அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை.
அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனவ கூட்டுறவு சங்க தேர்தலின் போது ஜெயக்குமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்சிக்குள் நிலவிய பிரச்னை காரணமாக மதுசூதனன் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுசூதனன் நேற்று திடீரென துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசினார். சென்னையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது முதலமைச்சர் பழனிசாமியுடன் மசூதனன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதன்பின் அவர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, தனது அதிருப்தி குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.