``பேரறிவாளனை விடுவித்த அரசு, என் தந்தை வாழ்வை சிறையிலேயே முடித்துவிட்டது“- மாதையன் மகள்

``பேரறிவாளனை விடுவித்த அரசு, என் தந்தை வாழ்வை சிறையிலேயே முடித்துவிட்டது“- மாதையன் மகள்
``பேரறிவாளனை விடுவித்த அரசு, என் தந்தை வாழ்வை சிறையிலேயே முடித்துவிட்டது“- மாதையன் மகள்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியிருந்த பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த அரசு, தவறே செய்யாத தனது தந்தையை 36 ஆண்டு சிறையிலேயே வைத்துவிட்டதாகவும், அரசின் இந்த நடவடிக்கையினால் தனது தந்தையின் வாழ்வு சிறையிலேயே முடிந்துவிட்டதாகவும் வீரப்பனின் சகோதரர் மீசை மாதையன் மகள் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

வீரப்பனின் சகோதரர் மீசை மாதையன் கடந்த 25 நாட்களாக உடல்நலக்குறைவால் சேலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்குக்கான முன்னேற்பாடு பணிகள் மேட்டூர் அணை கருமலைக்கூடல் பகுதியில் உள்ள அவரது மகள் ஜெயம்மாள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. அவரின் உடல் மேட்டூரை அடுத்த மூலக்காடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மகன் மணி மற்றும் அவரது சகோதரர் வீரப்பன் அடக்கம் செய்த இடத்திலேயே இவரையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மகள் ஜெயம்மாள் பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்த அரசு, தவறே செய்யாத எனது தந்தையை 36 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது. கடைசிவரை எங்களோடு அவர் வராமலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இது எங்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது” என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.

சந்தன மரக்கடத்தல், வனவிலங்குகள் வேட்டை வனத்துறையினர், காவல்துறையினர் மீது அதிரடி தாக்குதல் என தமிழக கர்நாடக அதிரடிப் படையினருக்கு சவாலாக இருந்த வீரப்பன் குறித்த விவரங்கள் அனைவரும் அறிந்ததே. வீரப்பனுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டது, அவரது அண்ணன் மாதையன். வீரப்பனின் அண்ணன் மாதையன் கர்நாடக மாநிலம் செங்கப்பாடி பகுதியை சேர்ந்தவர். ஊரில் எந்த பிரச்னை என்றாலும் வீரப்பன் மூலம் அவர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், வீரப்பன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் அவர்களை சட்டரீதியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற வேலைகளை மாதையன் செய்து வந்துள்ளார்.

மாதையன் ஒருமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அண்ணன் கைது செய்யப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக வீரப்பன், அந்த கைது மேற்கொண்ட வனச்சரகர் சிதம்பரம் என்பவரை, அவர் குண்டேரிபள்ளம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் (14.7.1987 அன்று) சுட்டுக் கொலை செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கொலைக்கு தூண்டுதலாக இருந்த காரணத்திற்காக 1996 ஆம் ஆண்டு வீரப்பன் அண்ணன் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முதலில் சிதம்பரம் கொலை வழக்கு FIR இல் மாதையன் பெயர் இல்லை. சரியாக 14.8.1988 அன்று, அவ்வழக்கு சிபிசிஐடி-க்கு  மாற்றப்பட்டது. அதன்பிறகே A-9 பெருமாள், A-10 மாதையன் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதனிடையே தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பனின் உடல் மேட்டூரை அடுத்த மூலக்காடு பகுதியில் உள்ள மாதையன் மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோவை மத்திய சிறையிலிருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். வயது மூப்பு ஒரு புறம், இருதய கோளாறு சர்க்கரை நோய் என சிரமப்பட்டு வந்த மாதையனுக்கு அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 77 வயதான மாதையன் திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த 1ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் மாதையனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்று அதிகாலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேட்டையில் கைதேர்ந்த வீரப்பனுக்கு மூளையாகவும் முதுகெலும்பாகவும் செயல்பட்டவர் மாதையன். வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு மாதையனை விடுவிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் மாதையனின் வாழ்க்கை சிறைவாசத்திலேயே முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com