70 சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: மா.சுப்பிரமணியன் விளக்கம்

70 சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: மா.சுப்பிரமணியன் விளக்கம்
70 சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஊட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சுகாதார அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சமீபகாலமாக இந்தியா முழுவதும் H2N3 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலை தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் படி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கி சென்னையில் 200 வர்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும் தமிழகம் முழுவதும் 800 இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன.

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பெரிய அளவில் பதற்றம் அடைய தேவை இல்லை. காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், தொண்டை வலி பதிப்பு ஏற்பட்டவர்கள் பதற்றமின்றி சிகிச்சை பெறவும். குறிப்பாக காய்ச்சல் பாதித்தவர்கள் வீடுகளில் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளவும். கொரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல இப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பேரிடர் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால், ஒமைக்ரான் வகையான தாக்கம் கூடிக்கொண்டிருக்கிறது. தினசரி 20 முதல் 25 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் தொடர் விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிந்துவந்தால், பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்” என்றார்.

தொடர்ந்து ஊட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தை பாதித்ததாக வந்த தகவலுக்கு பதிலளித்த அமைச்சர், “வியாழக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை தந்துள்ளார்கள். அதிலும், அங்கிருந்த ஆசிரியர்கள் மொத்தமாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை 70 மாத்திரை சாப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com