மு.க.முத்து மகளின் பகீர் மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மு.க.முத்து மகளின் பகீர் மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மு.க.முத்து மகளின் பகீர் மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
Published on

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் தொடந்த வழக்கில், காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள மு.க.முத்துவின் மகள் ஷீபா ராணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது அப்பா, மு.க. முத்து, எனது தாயாரை 1988 ஆம் ஆண்டில் இந்து முறைப்படி, கல்யாணம் செய்து, கொண்டு கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு நான், மகளாக கடந்த 1991 ஆம் ஆண்டில், எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறந்தேன்.

அதன்பிறகு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் எனது அப்பா, அம்மாவுடன் நான் இருந்து வந்தேன். அங்கு வந்த எனது அப்பாவின் மூத்த மனைவியின் மகன் அறிவுநிதி மற்றும் அவருடன் வந்த 10 ரவுடிகள், என்னையும், எனது அம்மாவையும் அடித்துபோட்டு வீட்டில் இருந்த பொருட்களை வெளியே அள்ளி வீசிவிட்டு, அந்த வீட்டை அபகரித்து கொண்டார். இதையடுத்து, நானும், எனது அம்மாவும், ஆவடியில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். கடந்த 1997ல் எனது அப்பாவை இசிஆர், பாலவாக்கத்தில் வைத்து நானும், அம்மாவும் சந்தித்தோம். அப்போதும் அங்கு வந்த அறிவுநிதி, எங்களை தாக்கிவிட்டு சென்றார். அதன் பிறகு, என் அப்பாவைச் சந்திக்க விடாமல், அறிவுநிதி தடுத்து வந்தார். இப்போது, நாங்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

2009 முதல் 2014ஆம் ஆண்டு கால கட்டத்தில், என் அப்பாவை இதுவரை பார்க்கவில்லை. இதுதொடர்பாக எங்கு புகார் செய்தாலும் நியாயம் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டில், திருவாரூரில் வைத்து என் அப்பாவை சந்தித்தேன். அப்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அறிந்ததும், அறிவுநிதி என் அப்பாவை, சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக என் அப்பாவை பார்க்க முடியவில்லை. அவரை அவரது மகன் அறிவுநிதி சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக, சென்ற ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அறிவுநிதியிடம் சட்டவிரோத காவலில் இருக்கும் என் அப்பா மு.க.முத்துவை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் சி.டி செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி, சென்னை காவல் ஆணையர், மைலாப்பூர் துணை கமிசனர், கோட்டூர்புரம் உதவி கமிசனர், போலீஸ் இன்ஸ்பெக்டர், அறிவுநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com