ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி! ஸ்டாலின் கடும் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி! ஸ்டாலின் கடும் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி! ஸ்டாலின் கடும் கண்டனம்
Published on

வறட்சி, குடிநீர் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக விவாசாயிகளின் கருத்துக்களை முன்கூட்டியே கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு, வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் இந்தத் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்த அனுமதியை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். ஆனால், இந்த அழிவுத் திட்டங்களை எதிர்க்கத் துளியும் துணிச்சல் இல்லாத  அதிமுக அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வதைத்து வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை மோடியும் கண்டு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல்.

விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி, குடிநீர் பஞ்சம் என்று காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வீட்டுக்குப் போகும் நேரத்தில் கூட தமிழக மக்களுக்கு வேதனை தருவோம், துரோகம் செய்வோம் என்று இப்படியொரு அபத்தமானதும் ஆபத்தானதுமான அனுமதியை பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் கைகோர்த்து அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, மத்தியில் புதிய அரசு அமையும் வரை வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியையும், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளையும் மத்திய பாஜக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, தமிழக அரசே இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக கடிதம் எழுதி, இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com