LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
செய்தியாளர்: எம்.துரைசாமி
புதிய டெண்டர் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தென் மாநிலங்களில் உள்ள 7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கேஸை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், தமிழகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 4,200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கான வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களும் 2025 - 2030 க்கான புதிய டெண்டரை அறிவித்துள்ளன. புதிய டெண்டரில் விதிமுறைகள் மிகவும் கடினமாக இருப்பதாலும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் பெயர் மாற்றத்திற்கு அனுமதி கொடுக்காததாலும், அபராதத் தொகை மற்றும் ஓட்டுனர்கள் பிளாக் லிஸ்ட், 21 டன் எடை கொண்ட 3 அச்சு வாகனங்களுக்கு முன்னுரிமை, கிளீனர் கட்டாயம் போன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலையில் நமது வாகன உரிமையாளர்கள் இருப்பதால் அதிகாலை முதல் வாகனங்களை லோடு ஏற்றமால் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில், சமையல் எரிவாயு ஏற்றி செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு சில நாட்களுக்கு பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது.