‘சர்ச்சைக்குரிய ஓவியங்கள்?’ மன்னிப்பு கோரியது லயோலா நிர்வாகம்

‘சர்ச்சைக்குரிய ஓவியங்கள்?’ மன்னிப்பு கோரியது லயோலா நிர்வாகம்
‘சர்ச்சைக்குரிய ஓவியங்கள்?’ மன்னிப்பு கோரியது லயோலா நிர்வாகம்

வீதி விருது விழா நிகழ்ச்சியில் இந்து மதத்தை விமர்சிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாக இந்து அமைப்புகள் புகார்கள் தெரிவித்திருந்த நிலையில், லயோலா கல்லூரி நிர்வாகம் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து வீதி விருது விழாவை நடத்தியுள்ளது. ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் இந்த விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவை கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு, தமிழ்நாடு அனைத்து நாட்டுப் புறக் கலைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியோரும் இணைந்து நடத்தியுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபல ஆளுமைகள், நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இயற்கை உணவு குறித்த கண்காட்சி நடைபெற்றது. அதேபோல், ஓவியக் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. 

இந்நிலையில், விழாவை முன்னிட்டு லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இந்து மதத்தையும், மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்ததாக இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  மேலும், இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனுவையும் அனுப்பியுள்ளது. நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த ஓவியங்களுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரிடம் பேசுகையில், “நிகழ்ச்சியில் ஓவியங்கள் வைப்பதற்கு முகிலன் என்பவர் ஸ்டால் கேட்டார். அவருக்கு ஸ்டால் கொடுத்ததை தவிர ஓவியங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

வீதி விருதி விழாவில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஓவியங்களுக்காக லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக லயோலா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் கவனத்துக்கு வந்தவுடன் கண்காட்சியில் இருந்த சர்ச்சை ஓவியங்கள் நீக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com