\
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்துக்கு "ஆரஞ்சு அலர்ட்"

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்துக்கு "ஆரஞ்சு அலர்ட்"

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்துக்கு "ஆரஞ்சு அலர்ட்"
Published on

அதிகனமழை பெய்‌ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளா, கர்நாடகா‌ ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுத்துள்ளது.

வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்‌ என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்‌ளது. எனவே, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரா, தெலங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள மாநிலம் இடுக்கியில் இரண்டாவது நாளாக விட்டு விட்டு கன மழை பெய்துவருகிறது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு, முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலு‌ம் கன மழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடுக்கி மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புது‌ச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் ‌என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்க‌ப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com