காதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..!

காதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..!
காதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காதல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பெற்றோருக்கு ஆதரவாக பெண்ணை கணவரிடம் இருந்து பிரிக்க காவல்துறையினர் முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்தவர்கள் விஜயராஜ்- டயானா தம்பதி. கடந்த 9 ஆண்டுகளாக காதலித்த இவர்கள், ‘அலைபாயுதே’ திரைப்பட பாணியில் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் தனிவீட்டில் சேர்ந்து வாழ முடிவு செய்தபோது, காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. விஜயராஜ் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் டயானாவின் காதலை அவரது பெற்றோர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

பெரும்பாலான வீடுகளில் நடைபெறுவது போல வெடித்தது பிரச்னை. விஜயராஜிடம் இருந்து டயானாவை பிரித்த அவரது பெற்றோர் வீட்டுச் சிறையில் அடைத்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி பதிவுத் திருமணம் செய்ததற்கான ஆவணங்களுடன் நித்திரவிளை காவல் நிலையத்திற்குச் சென்றார் விஜயராஜ். ஆனால், அவருக்குப் போட்டியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் டயானாவின் தந்தை சூசையா. தனது மகளை பதிவு திருமணம் செய்து கொண்டதாக போலி ஆவணங்களை தயாரித்து மிரட்டுகிறார் விஜயராஜ் என்பதே சூசையாவின் புகாராக இருந்தது.

இதனையடுத்து விஜயராஜ், டயானா இருவரும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். விஜயராஜூம் தானும் திருமணம் செய்து கொண்டது உண்மையே எனக்கூறிய டயானா கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். ஆனால் டயானாவை அவரது பெற்றோருடன் செல்லும்படி உதவி ஆய்வாளர் ஹேமலதா மற்றும் தலைமைக் காவலர் சுதா ராணி ஆகியோர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. டயானாவை குண்டுகட்டாக காரில் ஏற்றி அனுப்ப அவர்கள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் காரில் ஏற மறுத்து தரையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தினார் டயானா. தகவலறிந்த ஏ.எஸ்.பி. கார்த்திக், உதவி ஆய்வாளர் ஹேமலதாவை தொடர்பு கொண்டு டயானாவை அவரது கணவருடன் அனுப்ப அறிவுறுத்தினார். பல மணிநேரத்திற்குப்பின் டயானாவின் காதல் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. ஆனந்த கண்ணீருடன் சந்தோஷமாக தனது காதல் கணவருடன் சென்றார் டயானா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com