ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்ட காதல் ஜோடி.. நலம் விசாரிப்பதுபோல உறவினர்கள் வீடுகளில் கைவரிசை..!
வளசரவாக்கத்தில் போலி சாவியை தயாரித்து உறவினர் வீடுகளில் கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன்(36). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு ஆணும், பெண்ணும் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, தனது உறவினர் மகன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன்(24), மதுரவாயலை சேர்ந்த அவரது காதலி நித்தியா(24), ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வந்தபோது அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யவும், ஆடம்பரமாக வாழவும் என்ன செய்வது என்று முடிவு எடுத்தனர். இதற்காக கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அத்துடன் வீட்டின் பூட்டை உடைக்காமலும் போலீசாரிடம் சிக்காமலும் நூதன முறையில் கொள்ளை அடிக்க வேண்டும் என முடிவு செய்து திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்காக இருவரும், கார்த்திகேயன் உறவினர்களின் வீடுகளுக்கு அவர்களை நலம் விசாரிக்க செல்வது போல் சென்று அந்த வீட்டில் உள்ள அறைகளை கண்காணிப்பார்கள். மேலும் அவர்கள் வெளியே செல்லும்போது சாவியை எந்த இடத்தில் வைத்து விட்டு செல்கின்றனர் என்பதை அறிந்து கொள்வார்கள். அந்த சாவியை போல் போலியான சாவியையும் தயார் செய்து கொண்டு, அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரம் பார்த்து வீட்டிற்கு சென்று உள்ள பொருட்களை திருடி மீண்டும் அதே இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதால் அந்த பகுதியில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதுபோல் பல்வேறு இடங்களில் உறவினர் வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர். தற்போது வளசரவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சியில் கையும் களவுமாக பிடிபட்டதையடுத்து வளசரவாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.