ட்ரோன் கேமிராவை கண்டதும் முகத்தை மூடி தெறித்தோடிய காதல் ஜோடி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ட்ரோன் கேமிராவை கண்ட காதல் ஜோடியும் கிரிக்கெட் ஆடியவர்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைகளைத் தவிரப் பிற அனைத்து தேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதே போல அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்துப் பிற எந்த தேவைகளுக்காகவும் மக்கள் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் விதிகளை மீறி, இளைஞர்கள் பலர் வெளியே சுற்றி வருகின்றனர். ஆகவே, வெளியே சுற்றித்திரிவோரைக் கண்காணிப்பதற்காகத் தமிழக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் கும்மிடிப்பூண்டிப் பகுதியை ட்ரோன் மூலம் கண்காணித்தபோது, ஏரிக்கரையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமிராவை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டும் ஓடினர். சிலர், ட்ரோன் கேமிராவை துரத்தியபடியும் ஓடினர். இது மட்டுமல்லாமல் தைலமர காட்டிலிருந்த காதல் ஜோடி, ட்ரோன் கேமிராவை கண்டதும் தலைதெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சிகளைக் காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.