பேச மறுத்ததால் பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் !
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் என்ற கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் அசோனா. விருத்தாசலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இருவர், பிளேடால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்தது. கொங்கராம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் அலக்ஸ் என்ற பிரபாகர் என்பவர் அந்தப் பெண்ணை கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிரபாகரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபாகர், அசோனாவை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. சமீபகாலமாக அசோனா இவரிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் அசோனா பணிக்கு செல்லும் போது அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.