மரங்களிலேயே வீணாகும் மாம்பழங்கள்: பறிக்காமல் வருந்தும் விவசாயிகள்
போச்சம்பள்ளி பகுதியில் மாம்பழங்கள் மரங்களிலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான கரடியூர், சந்தூர், வேலம்பட்டி, நாகரசம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் பல ஏக்கர் அளவில் மாம்பழ விவசாயம் நடந்து வருகிறது. இங்கு வைகாசி மற்றும் ஆனி மாதம் முழுவதும் பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா ஆகிய மா வகைகள் அதிக அளவு அறுவடை செய்யப்படும். கடைசியாக ஆடி மாதங்களில் நீலம் மாம்பழங்கள் அறுவடைக்கு தயாராகும். அப்போது மற்ற வகை மாம்பழங்கள் கிடைக்காது என்கிற நிலையில், நீலம் வகை மாம்பழங்கள் நல்ல விற்பனை பெறும்.
இந்நிலையில் இந்த வருடம் பருவ நிலை மாற்றம் காரணமாக, வைகாசி மற்றும் ஆனி மாதங்களிலேயே நீலம் மாங்காய்களும் அறுவடைக்கு தயாராகியுள்ளன. அதேபோல் போச்சம்பள்ளி பகுதியில் அதிக விளைச்சல் காரணமாகவும், வெளிமாநில மா வியாபாரிகள் வரத்து குறைவினாலும் அனைத்து மாம்பழங்களும் தேக்கமடைந்துள்ளன. இதனால் கடந்த வருடம் கிலோ ரூ.20க்கு விற்பனையான பெங்களூரா மாம்பழம், இந்த வருடம் கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது. கடந்த வருடம் ரூ.60க்கு விற்கப்பட்ட மல்கோவா மாம்பழம் இந்த வருடம் ரூ.30ற்கு விற்கப்படுகிறது. சராசரியாக விலை போகும் நல்ல ரகம் மாம்பழங்களே தேக்கமடைந்து விலை குறைந்து காணப்படுவதால், நீலம் மாம்பழங்களை யாரும் வாங்குவதில்லை. இதனால் போச்சம்பமள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீலம் மாங்காய்கள் மரங்களிலேயே பழுத்து கீழே விழுந்து வீணாகின்றன.
இதுகுறித்து மா விவசாயி அண்ணாமலை கூறும்போது, பெங்களூரா மாம்பழங்கள் கிலோ ரூ.5க்கு தான் விலை போகிறது. நீலம் வகைகளை யாரும் வாங்க முன்வரவில்லை. ஆகையால் மரங்களில் இருந்து பறிக்காமலேயே விட்டுவிட்டோம். அவை பழுத்து கீழே விழுகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார்.