மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பதவியேற்பதை அடுத்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று இரண்டாவது முறை பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வெளிநாட்டு தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி பதவியேற்பு விழா நடைபெறும் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு துணை ராணுவப் படை, அதி விரைவு படை, டெல்லி காவல்துறை என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போர் வீரர்கள் நினைவிடம், ராஜ்காட் மற்றும் வாஜ்பாய் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியப் பின் பிரதமர் மோடி பதவியேற்கவுள்ளதால், அந்தப் பகுதிகளில் இருக்கும் உயர்ந்த கட்டடங்களில் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து எதிரிகளை சுடும் ஸ்னைபர் துப்பாக்கிச் சூடு வீரர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடி செல்லும் வழி நெடுகிலும், 2 ஆயிரம் பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல முக்கிய சாலைகள் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது. குறிப்பாக விஜய் சவுக் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்லும் சாலைகள், தெற்கு மற்றும் வடக்கு அவின்யூ, சர்ச் சாலை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com