தொடருது லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை உயரும்
தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அதன் விலை உயரும் என கூறப்படுகிறது.
3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை போக்குவரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முடிவு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
அதன்படி இன்றும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. சென்னையின் முக்கிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் லாரிகள் மூலமாக காய்கறிகள் வருவது வழக்கம். நேற்று முதலே லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் கோயம்பேட்டிற்கு காய்கறிகளின் வரத்து மிக குறைந்த அளவில் காணப்படுகிறது. இதனால் 30 சதவிகிதம் வரை காய்கறிகள் விலை உயர்வு ஏற்படலாம் என கோயம்பேடு வணிகர்கள் கருதுகின்றனர். இதனிடையே முட்டைக்கு பெயர்போன நாமக்கலில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்ததால் ஏராளமான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.