கண்டெய்னர் ரிமோட்டை தவறுதலாக இயக்கியதால் நேர்ந்த பரிதாபம்: லாரி ஓட்டுநர் பலி
சென்னை அடுத்த அம்பத்தூரில் கன்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்தியபோது லாரியின் ஓட்டுநர் கழுத்து இறுகி உயிரிழந்தார்.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 29ந்தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கி உள்ளார்.
பின்னர் அவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக் கொண்டு புழல்- தாம்பரம் புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர், அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி பக்கவாட்டில் உள்ள கண்டெய்னரில் இரு அடுக்குகளை இயக்கும் ரிமோட்டை சரி பார்த்து உள்ளார். அப்போது, குனிந்து ரிமோட்டை தவறாக இயக்கியபோது ஆனந்த்குமார் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.