சென்னை வேளச்சேரியில் லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு
லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முதல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது அவ்வழியே சென்ற லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் இளம்பெண்ணுக்கு மார்பு, இடுப்பு, வயிறு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட பொது மக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரித்த நிலையில் முதற்கட்டமாக அடையாளம் தெரியாத லாரி மோதியதாகவும், உயிரிழந்த பெண் ஆலந்தூரை சேர்ந்த ஷெர்லி மடோனா(22) என்பதும் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்து லாரியை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.