‘நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி’ - தப்பிய திருடர்களுக்கு வலைவீச்சு
திருச்சியில் நடைபெற்ற கொள்ளை போன்று, அரியலூரில் உள்ள நகைக்கடையில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை உள்ளது. நேற்றிரவு இந்த கடையில் கொள்ளையடிக்க முகமூடி அணிந்து வந்த திருடர்கள், சிசிடிவி கேமரா லென்சில் சுவிங்கத்தை ஒட்டியுள்ளனர். பின்னர் கடையின் பின்புற சுவற்றை துளையிட்டுள்ளனர்.
அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு கடைக்கு பின்னால் சென்று பார்த்துள்ளனர். அவர்களை கண்ட கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின. இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றினர். மேலும், கொள்ளை கும்பல் யார் என வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.