கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்?

கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்?
கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்?

தொழிலதிபர் கிரண் ராவ் வெளிநாட்டுக்கு தப்புவதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்ததில், ஐம்பொன் சிலைகள், கற்தூண்கள் என 91 தொன்மையான கலைப் பொருட்களை போலீசார் மீட்டனர். தொடர்ந்து ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீடுகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஐம்பொன் சிலைகள், தூண்கள் என மொத்தம் 223 தொன்மையான கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன. ஏற்கெனவே சிறையில் உள்ள சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவிற்கு குறிப்பிட்ட அளவிலான சிலைகளை விற்றதாக சில எண்ணிக்கையை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய எண்ணிக்கைக்கும் ரன்வீர் ஷாவிடம் மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்துள்ளது. 

இதை தொடர்ந்து ரன்வீர் ஷாவிற்கு நெருக்கமான நண்பர்கள் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து வந்த நிலையில்தான் சிக்கினார் பெண் தொழிலதிபரான கிரண் ராவ். அண்ணா சாலையில் ரெஸ்டாரண்ட் வைத்திருக்கும் கிரண் ராவ், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். தமிழகத்தில் உள்ள தனது குடும்ப சொத்தான சர்க்கரை ஆலையில் நிரந்தர நிர்வாக இயக்குனராக இவர் உள்ளார். இவரது தாய் ஜெர்மனியை சேர்ந்தவர் என்பதால், கிரண் ராவிற்கும் ஜெர்மன் குடியுரிமை உள்ளது. இவரது சர்க்கரை ஆலை நிர்வாகக் குழுவில் தான் ரன்வீர் ஷா இயக்குனராக உள்ளார். இப்படி தான் ரன்வீர் ஷாவுக்கும், கிரண் ராவிற்கும் சிலைகளை பதுக்கும் அளவிற்கு தொழில் கூட்டாளிகள் ஆயினர்.

இந்த நட்பை பயன்படுத்தி தான் ரன்வீர் ஷா, கிரண் ராவின் வீட்டில் சிலைகளை புதைத்து வைத்துள்ளதாக தெரிகிறது. தோட்டத்தில் வைக்கப்பட்ட சிலைகள், பண்ணை வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள், தொழில் கூட்டாளிகளின் வீடுகளில் புதைந்த நிலையில் மீட்ட சிலைகள் என சிலை கடத்தல் மற்றும் கும்பலின் வட்டாரமானது நீண்டு கொண்டே செல்கிறது. சிக்கிய அனைத்து தொழிலதிபர்களும் ஏற்றுமதியாளர்கள். இவர்களின் நட்பில் வேறு யாரேனும் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிரண் ராவிற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே தொழிலதிபர் கிரண் ராவ் வெளிநாட்டுக்கு தப்புவதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிற்ப்பிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com