மக்களவை தேர்தல் ஜுரம் தமிழகத்தில் ஏற்கனவே பரவியிருக்கிறது. தேர்தல் அறிவிக்கும் முன்பே யார் யாரோடு கூட்டணி என்ற விஷயங்கள் உறுதியாகியிருக்கிறது. சிலர் மட்டும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் தயராகி விட்டது. ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்த உகந்த சூழல் உள்ளதா என்பதை ஆராய வரும் மார்ச் 4-ம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கு செல்ல உள்ளனர். ஏனெனில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டி உள்ளது.
இதனிடையே மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தின் முதல் பாதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரதமர் தலைமையில் மார்ச் 6-ம் தேதி அனைத்து மாநில செயலர்கள் கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் அதற்கு பின்னரே அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக மார்ச் 9 அல்லது 10-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.
லோக் சபாவின் பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதியும் சிக்கிம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 27-ம் தேதியும், அருணாச்சல பிரதேச சட்டமன்ற ஆயுட்காலம் ஜூன் 1ம் தேதியும், ஆந்திரா மற்றும் ஒடிசா முறையே ஜூன்18, ஜூன் 11 ஆகிய தேதிகளில் முடிவடைகின்றன. எனவே மே 27-ம் தேதிக்கு முன்னரே தேர்தல் முடிவுகளை வெளியிடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிய போது, மொத்தமாக 7 அல்லது 8 கட்ட தேர்தலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் , முதல் கட்டத்தில் பதட்டம் மிக்க மாநிலங்களில் வாக்குப்பதிவு இருக்கும் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக ஜம்மு , சத்தீஸ்கர் , நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்கள் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தனர். தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இருக்கலாம் என்றும் ஏப்ரல் 20 வாக்கில் தேர்தலுக்கு வாய்ப்பு எனவும் குறிப்பிட்டனர்.