“நாங்களும் மத்திய அரசும் கூட்டணி இல்லை” - துணை சபாநாயகர் தம்பிதுரை
தாங்களும் மத்திய அரசும் கூட்டணி இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் அரசின் திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் 8 ஆயிரம் கிராமங்கள் சென்று மக்களின் குறைகளை கேட்டு வந்துள்ளேன். மு.க. ஸ்டாலின் மத்தியிலும் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடையாது. தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வந்தாலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பஞ்சாயத்து தேர்தலுக்கு தான் ஸ்டாலின் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
அதனால் தான் கிராமசபை கூட்டம் நடத்தி பஞ்சாயத்து செய்து வருகிறார். ஆனால் பஞ்சாயத்து தேர்தல் வந்தால் கூட அவரால் வெற்றி பெற முடியாது. தமிழகத்தின் முதல்வராகவோ, மத்திய ஆட்சியில் அங்கம் வைப்பதற்கோ திமுகவால் முடியாது. இன்றைய நிலையில், மத்திய அரசும் நாங்களும் கூட்டணி கிடையாது. நான் துணை சபாநாயகராக பதவி வகிக்கிறேன். ஒருவேளை நாங்கள் கூட்டணியில் இருந்தால் இந்த பதவி எனக்கு தர முடியாது. எதிர்கட்சிக்குத்தான் துணை சபாநாயகர் பதவி வழங்க முடியும். இதுவரை கூட்டணி நிலை ஏற்படவில்லை. மத்திய அரசின் சில திட்டங்களால் நமக்கு பலன் கிடைக்காமல் இருக்கிறது” என்றார்.

