மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட் ராமமோகன் ராவ் மற்றும் எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு முதலில் உத்தரவிட்டனர். அது சாத்தியமல்ல என்று வாதிட்ட மாநில தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், மே 15ஆம் தேதிக்கு முன் தேர்தலை நடத்துவது இயலாத காரியம் என்று கூறினார். இதையடுத்து, மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை மார்ச் 1ம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.