68 நாடுகள் மீதான புதிய வரியை அறிவித்தது அமெரிக்கா; எப்போது அமல்?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் பேசி முடிவு செய்யாத நாடுகளுக்கு புதிய வரிகளை வெள்ளை மாளிகை விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்னும் 7 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அதிகபட்சமாக பிரேசிலுக்கு 50, சிரியாவுக்கு 41 விழுக்காடு வரியை விதித்துள்ளது அமெரிக்கா. லாவோஸ், மியான்மருக்கு 40 விழுக்காடு, சுவிட்சர்லாந்துக்கு 39, ஈராக் மற்றும் செர்பியாவுக்கு 35 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா, லிபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு 30 விழுக்காடும், இந்தியா, புருனே, கஜகஸ்தான், துனிசியா ஆகிய நாடுகளுக்கு 25 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவுக்கான வரி விதிப்பை 25 விழுக்காட்டில் இருந்து 35 விழுக்காடாக அதிகரித்துள்ளது அமெரிக்கா. எனினும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் ஏற்றப்படும் சரக்குகளுக்கும், ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் சரக்குகள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் அமெரிக்காவை வந்தடைந்து விட்டால் அவற்றுக்கும், புதிய வரி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தங்களது நண்பராக இருந்தாலும், இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் மிகவும் கடுமையானவை என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மிக அதிகளவில் வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.