சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி சொல்ல மறுத்தது எதை தெரியுமா? தொடரும் கண்டனங்கள்!
தமிழ்நாடு என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அண்மை நாட்களாக பரவி வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். ஆளுநர் ரவி உரையை வாசிக்கத் தொடங்கியதும் ஆளும் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் ‘தமிழ்நாடு’ என்று முழங்கியவாறு வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், ஆளுநர் உரைக்காக அரசு தயாரித்த ஆங்கில பதிப்பில் இருந்த வார்த்தைகளை ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்திருந்தார். இதற்கு சட்டப்பேரவையிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு. ஆனால் ஆளுநர் அந்த மரபை மீறி செயல்பட்டிருக்கிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாடு என்ற சொல்லை தவிர்ப்பதற்காக Tamilnadu Government என்று இருந்ததை This Government என்று மாற்றி படித்திருக்கிறார் ஆளுநர் ரவி. இதுபோக “சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது.” என இருந்த இந்த குறிப்பிட்ட வரிகளை முற்றிலும் ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
இதனையடுத்து அரசால் தயாரிக்கப்பட்ட உரையை மாண்பை கடைப்பிடிக்காமல் ஆளுநர் பல வார்த்தைகளை தவிர்த்தற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவை குறிப்பிலிருந்து அவை பேரவை விதிப்படி நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து அதனை நிறைவேற்றவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே பாதியிலேயே சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டிருக்கிறார். அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுநரே வெளிநடப்பு செய்தது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இந்த நிகழ்வுக்கு பிறகு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் GETOUTRAVI என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் பாதியிலேயே புறப்பட்டது தேச விரோதம் என்றும் குறிப்பிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.