தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்? ரூ.200 கோடி மோசடி புகார்- சுகேஷ் சந்திரசேகரின் பகீர் பின்னணி
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சுகேஷ் சந்திரசேகர் இத்தனை கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக 2017 ஆம் ஆண்டில் கைதான சுகேஷ் சந்திரசேகர், பல ஒப்பந்தங்களை முடித்து கொடுப்பதாக டெல்லி தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய்வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பங்களா வீட்டில் டெல்லி அமலாக்கத்துறையினர் 7 நாட்கள் சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், கணக்கில் வராத 82 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு, பங்களாவுக்கு சீல் வைத்தனர்.
சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தப்போதும் ஏமாற்றுவதை விடவில்லை என்று டெல்லி அமலாக்கத்துறைக் கூறியுள்ளது. இதனிடையே சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 32 வயதாகும் சுகேஷ், 2007 ஆம் ஆண்டு அவருக்கு 17 வயதாக இருந்தபோது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டார். முன்னாள் கர்நாடக முதல்வரின் மகனுக்கு தான் நெருங்கிய நண்பர் என காட்டிக்கொண்ட சுகேஷ், முதன்முதலில் 85 வயது முதியவரிடமிருந்து 1.14 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு பெங்களூர் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் எச்.பி.ஆர் லே அவுட் என்ற இடத்தில் இருந்த 7,200 சதுர அடி நிலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தார். இதுமுதல் சுகேஷ் படிப்படியாக மோசடியில் ஈடுபட தொடங்கினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மனைவியான நடிகை லீனா மரியா பால் என்பவருடன் இணைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிபோல் நடித்து சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சிறைக்கு சென்று வந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மோசடி வழக்கில் சிக்கியபோது மிகப்பெரிய தொழிலதிபர்களை குறிவைத்து பல ஒப்பந்தங்களை முடித்துத் தருவதாக நம்பவைத்து பல கோடி ரூபாய் பெற்றது விசாரணையில் தெரிந்தது.
இதுமட்டுமின்றி சொகுசு கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரான சுகேஷ் சந்திரசேகர் ஒப்பந்தங்களை முடித்து கொடுத்தவுடன் அவர்களிடமிருந்த சொகுசு கார்களை பெறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி அமலாக்கத்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மனைவியான லீனா மரியா பால் வீட்டில் நடத்திய சோதனையில், சென்னை கானாத்தூரில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமாக கடற்கரை அருகே ஆடம்பர பங்களா ஒன்று இருப்பது தெரியவந்தது.
அந்த பங்களாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களான BMW, Benz, Range Rover என பிரமிக்க வைக்கும் அளவில் 16 கார்கள் இருந்துள்ளது. இதுமட்டுமின்றி சினிமா படப்படிப்புகளில் பயன்படுத்தப்பட்ட சொகுசு கேரவன் ஒன்றையும் அந்த பங்களாவில் சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ளார்.
பல கோடி மதிப்பில் இத்தாலி மார்பிள் கல்லில் கட்டப்பட்டுள்ள அந்த ஆடம்பர பங்களாவில் விலையுயர்ந்த மின்விளக்குகள், 1955 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த Mercedes Benz 300 SLR 722 காரை வீட்டின் நடுவில் பொருத்தி அலங்காரித்துள்ளது கண்ணை கவரும் அளவிற்கு இருந்துள்ளது. இதனால் அமலாக்கதுறையினர் அந்த காரை எடுக்க முடியாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் விலையுயர்ந்த ஏராளமான லெதர் காலணிகள், பெல்ட், துணிமணிகள் என அசரவைக்கும் வகையில் இருந்துள்ளது. ஒரு சாதாரண மோசடி நபர் இவ்வளவு சொத்துகளை குவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சுப்ரமணியன்