'அரசுச் செயலர்களுக்கான கடிதம் அவசியமற்ற விவாதம்' - தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம்
”அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது” என்று தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர், ”புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன. நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றுதான் இந்த நடைமுறை. நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும்” விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளது.
அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்' என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.