மதுரை: “பிள்ளைகளை இழந்துடுவோமோன்னு பயமா இருக்கு” - 14 குழந்தைகளுக்கு எலிக்காய்ச்சல்!

மதுரை மாவட்டம் மொக்கத்தான் பாறை கிராமத்தில் 14 குழந்தைகளுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொக்கத்தான்பாறை
மொக்கத்தான்பாறைpt web

மதுரை மாவட்டம் மொக்கத்தான் பாறை கிராமத்தில் 14 குழந்தைகளுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திடீர் காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் உயிரிழந்த பிறகே, மொக்கத்தான் பாறை கிராமத்தின் பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ளது மொக்கத்தான்பாறை கிராமம். 100-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3 வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்தார். 14 குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உசிலம்பட்டி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் 14 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீரும், முறையான மருத்துவ சிகிச்சையும் இல்லை என மொக்கத்தான் பாறை மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியமே 3 வயது சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் எனவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

மொக்கத்தான்பாறையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் இது குறித்து கூறுகையில், “பெரிய மருத்துவர் வரும்போது அங்கிருப்பவர்கள் எங்களுக்கு சிகிச்சை கொடுப்பார்கள். அப்படி இல்லையெனில் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை கொடுப்பார்கள். பணம் கொடுங்கள் அப்படி இருந்தால்தான் சிகிச்சை பார்ப்போம் என நேரடியாகவே கூறுவார்கள். சமீபத்தில்தான் எங்கள் ஊருக்கு போர் போட்டு கொடுத்துள்ளார்கள். குழந்தை இறந்ததன் பின்தான், குழாய் போட்டு அணை தண்ணீரை கொண்டு வந்து கொடுக்கின்றோம் என கூறி ஏற்பாடுகளை செய்துகொண்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு மதுரை மாவட்ட சுகாதார இயக்குநர் குமரகுரு மறுப்பு தெரிவித்துள்ளார். குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்த உடனே முகாம் அமைத்து சிகிச்சைக்கு அழைத்ததாகவும், ஆனால் சிகிச்சைக்கு குழந்தையை அழைத்து வராததால் காவல்துறையின் உதவியுடன் சிகிச்சை அளித்தாகவும் கூறினார். மேலும், குளிப்பதற்காக கட்டிக்கொடுக்கப்பட்ட தண்ணீர் தொட்டியிலிருந்த நீரை மொக்கத்தான் பாறை கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வேலாயி
வேலாயி

மொக்கத்தான் பாறையைச் சேர்ந்த வேலாயி என்ற பெண்மணி இதுகுறித்து கூறுகையில், “என் தங்கச்சி பையன் இறந்துவிட்டான். அவனை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. இப்போது இன்னொரு குழந்தையை ஐசியூவில் வைத்துள்ளார்கள்.

அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். எங்கள் பிள்ளைகளை நாங்கள் இழந்துவிடுவோமா என்று பயமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com