கிருஷ்ணகிரி: 2 வருடங்களாக போக்கு காட்டிய சிறுத்தை... தற்போது கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூர் பகுதியில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை புலியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த ரிசார்ட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் இந்த சிறுத்தை நடமாடி வருவது பதிவாகி இருந்தது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதைத் தொடர்ந்து ரிசார்ட் பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்ட கூண்டு ஒன்றை வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.