சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்: மாணவர்கள் அச்சம்
சாம்ராஜ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் கர்நாடக எல்லையில் கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. பந்திப்பூர் வனத்தை ஒட்டியுள்ள எடபெட்டா மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு மருத்துவக் கல்லூரியில் உருமல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி ஆசிரியர்கள் சிசிடிவி காட்சிப் பதிவை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று கல்லூரியில் புகுந்தது தெரியவந்தது. சிறுத்தை வழி தெரியாமல் அறைக்குள் புகுவதும் படிக்கடியில் செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு தங்கும் அறையில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடிப் பார்த்தபோது அது மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. இருப்பினும் வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
சாம்ராஜ்நகரில் இருந்து 4 கிமீ தூரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.