ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய எலுமிச்சை! இதுதான் காரணமா?
எலுமிச்சைப் பழத்தின் விலை, ஆப்பிளை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து களநிலவரத்தை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் கொளுத்திவரும் சூழலில், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழங்கள், ஜூஸ் வகைகளை மக்கள் நாடுவது அதிகரித்துள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி, கிர்ணி, டிராகன் உள்ளிட்ட பழங்களை விரும்பிவாங்கும் மக்கள், இளநீர், தர்பூசணி வரிசையில் எலுமிச்சை பழத்தையும் அதிகம் வாங்கி வருகின்றனர்.
ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்தால், ஒரு குடும்பமே ஜூஸ் அருந்தலாம் என்பதும், எளிதில் கிடைக்கும் பொருள் என்பதும் அதற்கான வரவேற்பிற்கு காரணம். அதோடு, எலுமிச்சையின் செயல்பாடு சாமானிய மக்கள் நன்கு அறிந்தது என்பதாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
விலை எவ்வளவு?
உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் எலுமிச்சம்பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் அதன் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் கிலோ 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
ஒரு கிலோ - 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையான எலுமிச்சம்பழம்,
தற்போது 160 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சாலையோரம் குவித்து வைத்து கூவிகூவி அழைத்தாலும், கேட்பாராற்று இருந்த எலுமிச்சைப் பழத்தின் விலை, கோடை வெயில் எதிரொலியாக அதிகரித்திருக்கிறது.
ஆப்பிள் பழத்தின் சில ரகங்கள் ஒரு கிலோ 100 முதல் 120 ரூபாயாக இருக்கும் நிலையில், எலுமிச்சை பழம் கிலோவுக்கு 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியையும், பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.