'கஜா’ புயல் எச்சரிக்கை காரணமாக 8 மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், வேதாரண்யம் - நாகை இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நேற்று விடு மறை அளிக்கப்பட்டிருந்தது. கனமழை, காற்று காரணமாக இன்று சிவகங்கை மற்றும் அரியலூர் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி க்ரையை கடக்கும். அப்போது சுமார் 100 கி.மீ முதல் 120 கி.மீ வரை புயலின் வேகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னல் மற்றும் மழை பெய்து வருகிறது.
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 67,168 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 10,420 பேர், நாகையில் 44,087 பேர், ராமநாதபுரத்தில் 913 பேர், தஞ்சையில் 4,678 பேர், புதுக்கோட்டையில் 1,881 பேர் மற்றும் திருவாரூரில் 5,189 பேர் முகாம்களில் உள்ளனர்.