வெளியான ப்ளஸ்2 வேதியியல் வினாத்தாள் அசல் வடிவம்தான்
இன்று நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வின் வினாத்தாளும் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியான வினாத்தாளும் ஒன்றுதான் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரையாண்டுத்தேர்வு என்பது பொதுத்தேர்வின் முன்னோட்டம் போல் பார்க்கப்படுவதால் முக்கியத்தேர்வாகவே கருதப்படுகிறது. அதன்படி பொதுத்தேர்வை போலவே அரையாண்டுத்தேர்வும் மாநிலம் முழுவதற்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டே நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வு இன்று நடைபெற்றது. இதற்கிடையே 12ஆம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் என்ற பெயரில் ஒரு கேள்வித்தாளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. ஆனால் அது அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் அல்ல என்று சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். இன்று தேர்வுகளில் வெளியான வினாத்தாளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வினாத்தாளும் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியான வினாத்தாளும் ஒன்றுதான் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்க அரசு தேர்வுகள் துறை இயக்ககத்தை பலமுறை தொடர்புக் கொண்டும் உரிய பதிலில்லை. வினாத்தாள் எங்கிருந்து கசிந்தது. அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் யார் என்பது இதுவரை எந்தத் தகவலும் இல்லை.