``இபிஎஸ் ஆதரவாளரா என கேட்டு தாக்கினர்”- அதிமுக நிர்வாகிகளிடையே முற்றும் தலைமை யுத்தம்

``இபிஎஸ் ஆதரவாளரா என கேட்டு தாக்கினர்”- அதிமுக நிர்வாகிகளிடையே முற்றும் தலைமை யுத்தம்
``இபிஎஸ் ஆதரவாளரா என கேட்டு தாக்கினர்”- அதிமுக நிர்வாகிகளிடையே முற்றும் தலைமை யுத்தம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தம் முற்றியுள்ளது. அதன் உச்சமாக, வாயிலில் தொண்டர்கள் மத்தியில் அடிதடியும் தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக அதிமுக கட்சிக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கி வருகிறது. நாளுக்கு நாள் இந்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒற்றைத் தலைமை குறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் தீர்மானக்குழுக்கூட்டமும், தரைத்தளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடனும் ஆலோசனையும் செய்வதாக தெரிகிறது. மற்றொரு பக்கம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சி நிர்வாகிகள் காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் - செல்லூர் ராஜூ ஆகிஒயோர் தனியாக ஆலோசனை நடத்தினர். போலவே செல்லூர் ராஜூ அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு ஏற்பட்ட சில சூழல்களால் அங்கிருந்து உடனடியாக செல்லூர் ராஜூ புறப்பட்டுவிட்டார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இந்நிலையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடியுமாதொடருமா என்பது தொண்டர்களுக்கு பெரும் கேள்வியாக உள்ளது. முன்னதாக, `மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே `அறிவித்த தேதியில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவேண்டும்’ என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்துவதாகவும், அதேநேரம், `பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும்’ எனவும் சிலர் வலியுறுத்துவதாகத் தகவல் வெளியாகிவருகின்றன.

அலுவலகத்துக்குள் ஆலோசனை தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக அலுவலக வாசலில் மோதல் ஏற்பட்டும் வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக பலரும் புகார் தெரிவித்துவருகின்றனர். அதில் ஒரு கட்சி நிர்வாகி, தான் இ.பி.எஸ். ஆதரவாளரா என கேட்டு அடிக்கப்பட்டதாக ரத்த காயத்துடன் செய்தியாளர்களிடம் புகார் அளித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை இன்னும் தொடருமா அல்லது இன்றாவது முடிவுக்கு வருமா என்பதை காலம்தான் சொல்லும்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com