முடிசூடும் பெருமாள்| TNPSC தேர்வு வினாவில் தவறான மொழிபெயர்ப்பு.. தலைவர்கள் கண்டனம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. நேர்காணல் அல்லாத பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தவறான மொழிபெயர்ப்பால் சர்ச்சை..
முதலாவதாக அய்யா வைகுண்டருக்கு அவரது பெற்றோர் முடிசூடும் பெருமாள் என்று முதலில் பெயரிட்டனர். அந்த பெயரை TNPSC தேர்வு வினாத்தாளில் God of Hair Cuttting என்று தவறாக மொழிபெயர்த்துள்ளது. அதற்கு முடி வெட்டும் தொழில் செய்யும் கடவுள் என்பது பொருள் ஆகும்.
அது மட்டுமல்லாது மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, "It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழக அரசுப்பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது. திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசுப்பணித்தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என தலைவர் எஸ்.கே பிரபாகர் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்புமணி ராமதாஸ்ஸும் எக்ஸ் தள பக்கத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.