சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அங்குள்ள ஊழியர்களே கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆபரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி மற்றும் தோட்ட வேலை செய்யும் குணசேகர் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். 17 பேரும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் இருந்து 17 பேரையும் சிறைக்கு அழைத்துச் சென்ற நேரத்தில் அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.