பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடத் தயார் : வழக்கறிஞர்கள் தரப்பு

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடத் தயார் : வழக்கறிஞர்கள் தரப்பு
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடத் தயார் : வழக்கறிஞர்கள் தரப்பு

பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்கறிஞர் சங்கத்தில் முடிவு எடுத்ததாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள ஒரு கும்பல், பெண்களிடம் நட்பாக பழகி ஆபாச வீடியோ எடுத்து, பின்பு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வீடியோவைக் காட்டி பணம் மற்றும் நகை பறித்து வருவதாகவும் காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது.

இந்தச் சூழலில் இதே பாணியை பயன்படுத்தி பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை இந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் நட்பாக பழகி, தனியே வரவழைத்து ஆபாச வீடியே எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. அவரிடமிருந்து 1 சவரன் நகையையும் பறித்தது.

இதையடுத்து கடந்த 25-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், ஆகிய மூவரை கைது செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாகி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தன்னைப்பற்றி தவறான செய்திகளை திமுக பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன். தன்னைப்பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் புகாரும் அளித்தார்.

வழக்கை திரும்ப பெற கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை மிரட்டியதாக அதிமுக பிரமுகர் நாகராஜ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதனால் அதிமுகவிலிருந்து நாகராஜ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாடக்கூடாது என கோவை வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. 

இந்நிலையில், பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்கறிஞர் சங்கத்தில் முடிவு எடுத்ததாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயார் எனவும் பெண்கள் புகார்கள் அளிக்க முன் வந்தால் தான் இனி இதுபோன்று யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com